உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு கார், ராயல் என்பில்டு பைக், டிராக்டர் போன்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அலங்காநல்லுரில் தொடங்கிய இந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் மிரண்டு போன மத்திய,மாநில அரசுகள் உடனடியாக தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளுக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை அனுப்பி வைத்தது.. அந்த மூன்று அமைச்சகங்களும் உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்கின.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமும்,அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவும் செய்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கார், ராயல் என்பில்டு பைக், டிராக்டர் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்துள்ள இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதும் அலங்கால்லுரை நோக்கியே திரும்பியுள்ளன.
