Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு நடத்தப்படுவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதன் காரணமும் அதன் வகைகளையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

jallikattu celebrated in tamilnadu during pongal festival and here the reason behind it
Author
First Published Jan 8, 2023, 5:16 PM IST

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதன் காரணமும் அதன் வகைகளையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருவிழாவாக தமிழகம் கொண்டாடுகிறது. அறிவியல் ரீதியாக, சூரியன் தனது திசையை மாற்றி வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாள் தான் பொங்கல் பண்டிகை. அப்போது தமிழக விவசாயிகள், நல்ல விளைச்சலுக்கு சூரியனுக்கு நன்றி தெரிவித்து, சூரியக் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்வர். தமிழ்நாட்டின் கிராமங்கள் பொங்கல் பண்டிகையின் போது வீடுகளை சுத்தம் செய்து வண்ணங்களால் அலங்கரித்து பொங்கல் வைப்பர். கரும்புகள், அரிசி மற்றும் பருப்புகளால் செய்யப்பட்ட இனிப்புகள் தனித்துவமானது, இது பண்டிகைக்கு உற்சாகத்தை சேர்க்கிறது. பொங்கல் தினத்தன்று அதிகாலையில், சூரியக் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பிரசாதங்களுடன் வண்ணமயமான ரங்கோலிகள் எங்கும் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவாகும். இந்த ஒற்றைப் பிரச்சினையில் பல சர்ச்சைக்குரிய கோட்பாடுகள் உள்ளன, ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் நீண்டகால போர்விளையாட்டுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டு என்பது உண்மையில் இரண்டு தமிழ் வார்த்தைகளான சல்லிக்காசு (காசுகள்) மற்றும் கட்டு (ஒரு தொகுப்பு) ஆகியவற்றின் கலவையாகும். காளையின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நாணயங்கள் இருக்கும் பொட்டலத்தை வீரர்கள் காளையை அடக்கி வெற்றிகரமாக எடுக்க்க வேண்டும். இந்த விளையாட்டு முன்பு ஏறு தழுவுதல் என்று குறிப்பிடப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது, இந்த விளையாட்டின் போது காளைகளை மாடு பிடி வீரர்கள் ஏறி தழுவி அதனை அடங்க முயல்வர். இதில் வெற்றி பெரும் மாடுகளுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் தங்கக்காசுகள், வாகனங்கள் முதல் ஏராளமான பரிசுகள் வழங்கப்படும். மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய மாவட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடத்தப்படும். ஜல்லிக்கட்டு என்றால் காளைகளை அடக்குதல். வாடிவாசல் என்ற நுழைவாயில் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். மாடுபிடி வீரர்கள் காளையை பிடித்து, அடக்கினால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். தவறினால் மாடு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும். 

வகைகள்:

  • வாடி மஞ்சுவிரட்டு
  • வேலி மனுவிரட்டு
  • வடம் விரட்டு

வாடி மஞ்சுவிரட்டு: 

வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடும் காளைகளின் திமிலை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயற்சி செய்வர். இந்த முறையை  வாடி மஞ்சுவிரட்டு என்பர். இது வழக்கமான முறை என கூறப்படுகிறது.

வேலி மனுவிரட்டு:

இந்த முறையில் காளைகள் நேரடியாக மைதானத்திற்குள் விடப்படுகின்றன. அங்கிருந்து வீரர்கள் காளைகளை அடக்க வேண்டும். இந்த முறை சிவகங்கை மற்றும் மதுரையில் மிகவும் பிரபலம்.

வடம் விரட்டு:
இந்த வகை காளைகளை 15 மீ நீளமுள்ள கயிற்றால் கட்டி, அவை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும். கொம்பில் கட்டப்பட்டிருந்த பையைப் பிடிக்க வீரர்கள் முயற்சி செய்வர். அவர்கள் திமிலை பிடிக்காமல், கழுத்து கொம்புகள் அல்லது வாலைப் பிடித்தால், அவர்கள் விளையாட்டிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அவர்கள் குறைந்தபட்சம் 30 வினாடிகள் அல்லது 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை பிடித்திருக்க வேண்டும். அதற்குள் காளை அவரை வீழ்த்தினால், மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios