ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மாணவர்களின் போராட்டம் உலகையே திரும்பி பார்க்க செய்தது. இதையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து, சீராவு மனு கொண்டு வந்து சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவனியாபுரத்தில் வரும் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது. இதையொட்டி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு குழுவினருடன், கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:-

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள், மாடு பிடி வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாடுபிடி வீரர்களின் உடல் பரிசோதனைக்காக மருத்துவ குழுக்கள், ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதிக்க கால்நடை பராமரிப்பு துறை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு காளைகளை இன்று முதல் நாளை மறுநாள் வரை பதிவு செய்து கால்நடை மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். போதைப்பொருள், எரிச்சலூட்டும் பொருள், ஊக்க மருந்துகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழுவில் காளைகளை குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்த வேண்டும். அங்கு தீவனம், குடிநீர் வசதி செய்ய வேண்டியது அவசியம். மாடுபிடி வீரர்கள் தங்களது அடையாள அட்டையுடன் சனிக்கிழமைக்குள் (நாளை மறுநாள்) விழா குழுவினரிடம் பதிவு செய்ய வேண்டும்.

வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதி வரை இரண்டு அடுக்கு தடுப்பு வேலி 8 அடி உயரத்துக்கு அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு, விழா டெபாசிட் பணம் செலுத்த வேண்டியது இல்லை என்றார்.

இதை தொடர்ந்து, மதுரை மாவட்டம் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள குருநாதன் கோயில் முன்பு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான முகூர்த்தகால் நேற்று நடப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.