அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 3-வது நாளாக தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை ஆணையரும் எச்சரித்துள்ளார். அதேபோல் நேற்று சென்னை உயர்நீதிமன்றம், 25-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

  

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். 

நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும். 28-ம் தேதி போராட்டத்தின் வடிவம் மாறும். எங்களது நிலைப்பாட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 28-ம் தேதி தெரிவிப்போம் என்று கூறினார்.