ஊதிய விகிதத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து  வருவதால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தாங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு  3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 22-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது  கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்தால் அரசுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுடன் அரசுத் தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 6-ம் தேதி வரை அரசிடம் இருந்து சாதகமான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும்  இரண்டு நாட்களில் அரசிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால் திட்டமிட்டபடி 7-தேதி வேலை நிறுத்தம் நடைபெறும்  என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள இந்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின்  கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் முடிவு தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை அரசு உரிய நேரத்தில் வெளியிடும் எனவும் அவரது அறிக்கையில் எடப்பாடி தெரிவித்துள்ளார்.