Jacto Jio protest

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த சில சங்கங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளன என்றும் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த காலவரையற்ற போராட்டத்தில் 56 அரசு ஊழியர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய போராட்டத்தில் பங்குபெறாத சங்கங்கள், நாளை முதல் போராட்டத்தில் பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஊழியர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம், சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, அரியலூர், திருச்சி, கரூர், நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னையின் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். 

வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு அரசின் உறுதியான அறிவிப்பு வரும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.