ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழப்புக்கு நடிகர் கமல் ஹாசன், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், கோராக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த 7 ஆம் தேதியில் முதல் இதுவரை குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கிவந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் நிலுவையில் உள்ளதால், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டை, அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் மறுத்துள்ளார். மேலும், அந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், முதலமைச்சர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத், விலக வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்து வருவது, இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், குழந்தைகள் உயிரிழப்பு குறித்து டுவிட்டரில், அரசு மருத்துவமனையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவே இரங்கல் தெரிவிப்பதாகவும் நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.