துணை குடியரசு தலைவர் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.

இதைதொடந்து இன்று நடைபெற்ற பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில்  துணை குடியரசு தலைவர் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், துணை குடியரசு தலைவர் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இணைப்பு பாலமாக செயலாற்றுபவர் வெங்கையா நாயுடு எனவும், வேட்டி கட்டிய ஒருவரை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.