திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவை போற்றும் வகையில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா மற்றும் கண்ணாடி நடை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கலைஞருக்கு நினைவிடம்
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடத்தை உள்ளார். அவரது நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு நினைவிடமும், மதுரையில் நூலகமும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த தூண் அமைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பார்வையிட்டு வருகிறார். மேலும் கருணாநிதி நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது. விரைவில் கட்டுமானப்பணி முடிவடைந்து திறக்கப்படவுள்ளது. இதே போல கருணாநிதி பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.

நடுக்கடலில் பிரம்மாண்ட பேனா
இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் மெரினா பகுதியில் உள்ள நடுக்கடலில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட பேனா வடிவம் கொண்ட சிலையை 134 அடி உயரத்திற்கு அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையை படகில் சென்று மக்கள் பார்த்து அதிசயத்து வருகின்றனர். தற்போது திருவள்ளுர் சிலையை விட ஒரு அடி உயரம் அதிகமாக பேனா நினைவு சின்னம் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா வடிவ நினைவு சின்னத்தை பார்க்கும் வகையில் பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

80 கோடியில் கண்ணாடி பாலம்
வங்ககடலில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும், பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பேனா சின்னத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டு மானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்படவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாலத்திற்கும், நினைவு சின்னத்திற்கும் கடலோர முறை ஒழுங்கு ஆணையத்தின் அனுமதிக்காக இந்த திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொரோனா...! விருதுநகர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்
