ஐஎஸ்.ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காக மீண்டும் சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும் சிலர் சென்னையில் சிக்குகின்றனர். மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீவிரவாத அமைப்புக்கான தொடர்புகள் ஆந்திர தெலுங்கானா மாநிலத்துடன் சென்னையும் இணைந்து செயல்படுகிறது என்பதற்கான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் பிப் மாதம் துவக்கத்தில் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடந்த அரசியல் சூழலில் ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாததால் சாதாரண சம்பவமாக மாறிப்போனது.
சென்னையில் சதி-திட்டம் தீட்டிய விவாகரம் தொடர்பாக வந்துள்ள திடுக்கிடும் தகவல் வருமாறு: தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கணிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் பெரிய வலைப்பின்னல் போல் தெரிகிறது.
தங்கம், போதை மருந்து, கள்ள நோட்டுகள் , ஹவாலா பணப் புழக்கம் என்ற ரீதியில் நன்றாகவே அண்டர் கிரவுண்ட் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கான பரிமாற்றத்துக்கு அவர்கள் பலரையும் பயன் படுத்தி வந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கடந்த பிப்.2 அன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, பிப். 3 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, தெலுங்கானா விஜயவாடாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்கள் சிக்கினர்.
அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் ரூ. 1 கோடி மதிப்பிலான 3 கிலோ 360 கிராம் தங்க பிஸ்கெட்டுகள் இருந்தது. 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மயிலாப் பூரை சேர்ந்த- காஜா நஜிமுதீன் (42), சகாபுதீன் (38), ஜமாலுதீன் (30), முகமது இக்பால் (35) என தெரியவந்தது . 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியதாக கூறினர்.
சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இது பற்றி விசாரணை நடத்திய போது மேலும் பல தகவல் வெளியானது . ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் கடந்த பிப்.05 அன்று பேட்டி அளித்தார். “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடந்த விசாரணையில், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, ஐ.எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவன் மீது டி.ஆர்.ஐ வழக்குப்பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது என்று கூறினார். பின்னர் சென்னை வந்த போலீசார் அவனை சிறையிலிருந்து டிரான்சிட் வாரண்ட் போட்டு ராஜஸ்தான் அழைத்து சென்றனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அவனுக்கு நான்கு பேர் நிதியுதவி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நான்கு பேர் யார் என்பதை விசாரிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
விசாரணையில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்ய உதவியுள்ளான். அவனுடன் தொடர்பு உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தங்கவைத்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.
