திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை காவல்துறைக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் மரணம் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளை காவல்துறைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறை தாக்குவதை ஏற்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் அஜித் என்ற இளைஞர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினரா?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன்?
தொடர்ந்து, "சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை?" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், கடந்த 4 ஆண்டுகளில், 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகளின் கேள்விகள், காவல் துறை விசாரணையின்போது ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன.
