வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் அல்லது சட்ட ஆலோசனைகள் தொடர்பாக வழக்கறிஞர்களை விசாரணை முகமைகளோ காவல்துறையோ விசாரணைக்கு அழைக்கவோ சம்மன் அனுப்பவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைகள் தொடர்பாக வழக்கறிஞர்களை விசாரணை முகமைகளோ அல்லது காவல்துறையோ விசாரணைக்கு அழைக்கவோ, சம்மன் அனுப்பவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குஜராத் வழக்கறிஞரின் மேல்முறையீடு:

குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞர் அஸ்வின்குமார் கோவிந்த்பாய் பிரஜாபதி அவரது கட்சிக்காரரின் வழக்கு தொடர்பாக காவல்துறை சம்மன் அனுப்பியது. வழக்கறிஞர் அஸ்வின்குமார் அந்த சம்மனை ரத்து செய்ய வலியுறுத்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். குஜராத் நீதிமன்றம் அவரது மனுவை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், அஸ்வின்குமார் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரித்த நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் என். கோட்டீஸ்வரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,"விசாரணை முகமைகளோ அல்லது காவல்துறையோ ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய அல்லது அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர்களுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப அனுமதிப்பது, சட்டத் தொழிலின் தன்னாட்சி அதிகாரத்தை கடுமையாகப் பாதிக்கும். மேலும், நீதி நிர்வாகத்தின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகவும் அமையும்" எனக் கூறியுள்ளனர்.

சட்டத் தொழில் நீதி நிர்வாகத்தின் அங்கம்:

சட்டத் தொழில் என்பது நீதி நிர்வாகச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "தங்கள் சட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு, அவர்கள் சட்ட வல்லுநர்கள் என்பதாலும், சட்டரீதியான விதிகளாலும் சில உரிமைகளும் சலுகைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன," என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு மேலும் கூறியது.

ஜாமீன் வழக்கில் ஆஜரான பிறகு காவல்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகிய ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க மாநில அதிகாரிகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆன் ரெக்கார்டு சங்கத்தின் தலைவர் விபின் நாயர் ஆகியோரின் உதவியையும் நீதிமன்றம் நாடியது.

விரிவாக ஆராயவேண்டிய இரண்டு பிரச்சினைகள்:

ஒரு தனிநபர் ஒரு வழக்கறிஞராக மட்டுமே ஒரு வழக்கோடு தொடர்புடையவராக இருக்கும்போது, விசாரணை முகமை அல்லது வழக்குத் தொடரும் தரப்பு அல்லது காவல்துறை நேரடியாக வழக்கறிஞரை அழைக்க வேண்டுமா என்ற கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியது.

ஒரு வழக்கில் தனிநபரின் பங்கு வழக்கறிஞராக மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் கொண்டிருந்தால், அப்போதும் அவர்களை நேரடியாக அழைக்க வேண்டுமா அல்லது அத்தகைய விதிவிலக்கான சூழ்நிலைக்கு நீதித்துறை மேற்பார்வை பரிந்துரைக்கப்பட வேண்டுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த இரண்டு பிரச்சினைகளும் விரிவான அடிப்படையில் ஆராயப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

வழக்கறிஞர்களுக்கு சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்புவது மேலோட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.