தேனி

தேனியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்துள்ளதால். மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிக்கனமாக திறக்க வேண்டியதாயிற்று. இதில், அழகர் ஆற்றில் இறங்க தண்ணீர் திறப்பது சாத்தியமற்றது என்று பொதுப்பணித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு வைகை அணை மட்டும்தான் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 23 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

சுமார் 15 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் தண்ணீரை மிக மிக சிக்கனமாக மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப் பகுதியின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தமுறை மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுமா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த திருவிழா வருகிற 10–ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது என்பதே உண்மை.

தற்போது வைகை அணையில் இருக்கும் தண்ணீர் குடிநீர் தேவைக்கே போதாத நிலை இருப்பதால், இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பொதுப்பணித் துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 160 மில்லியன் கனஅடியாக இருந்தது.