is cellphone caused death when speaking to others during rainy days
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் இருந்தே விட்டுவிட்டு பெய்தது. ஆனால் மாலையில் திடீரென இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்தது கன மழை. இடி மின்னல் தாக்கி நேற்று சென்னையில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (19) ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். ஐடிஐ மாணவரான அனகாபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் (17). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு அனகாபுத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, இரவு 9 மணி அளவில் லோகேஷின் வீட்டுக்குச் சென்றார் கிஷோர். இருவரும் 2ஆவது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்தப் பகுதியில் மின்னல் தாக்கியது. இதில், இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே இருவரையும் சோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது அந்தப் பகுதி மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி, மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். பெரும்பாலும் மழையின்போது மின் சாதனங்களைப் பயன்படுத்துவோர், திறந்தவெளியில் நிற்போர் மீது மின்னல் தாக்கி இது போன்ற உயிரிழப்புகள் நேர்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால்தான் மின்னல் தாக்கி மேற்படி உயிரிழப்புகள்
நேர்ந்ததாகப் பேசப்படுகையில், இது உண்மையில்லை என்கின்றனர் தொழில் நுட்ப வல்லுநர்கள்.
செல்போன், வயர்லெஸ் சாதங்கள் எல்லாமே ரேடியோ அலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவை. வானொலி எத்தனையோ ஆண்டுகளாக பயன்படுத்தி வரப் படுகிறது. பேட்டரி வைத்த ரேடியோக்களை எத்தனையோ பேர் எந்த அச்சமும் இன்றி பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே செல்போன் கதிர்வீச்சுக்கும் அலைகளுக்கும் மின்னலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பொதுவாக, செல்போனை சார்ஜரில் போட்டு மின் இணைப்புடன் இருக்கும் போது பயன்படுத்தியுள்ள சந்தர்ப்பங்களில் அவற்றின் பேட்டரிகள் வெடித்த சம்பவங்கள் ஓரிரு இடங்களில் நடந்துள்ளன. அதுபோல், சார்ஜரில் இணைத்து செல்போனை பேசிக்கொண்டிருந்தால், மின்னல் தாக்கும் போது, அவை மின் கம்பிகள் வழியாக சார்ஜரில் இருக்கும் செல்போனுக்கும் பரவி அதன்மூலம் மின் அதிர்ச்சி ஏற்பட்டு தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. ஆனால், சாதாரணமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் மின்னல் தாக்கி மரணம் அல்லது காயம் ஏற்படும் என்று கூறப்படுவது தவறு என்கிறார்கள் வல்லுநர்கள்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனராம். இப்போது இடி மின்னல் அதிகமாக உள்ள சூழலில், மின்னல் தாக்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம்..?
பொதுவாக மின்னல் தாக்கும் போது, வீட்டின் சுவர், மின் இணைப்பு, கம்பிகள் வழியாகத்தான் அதிக அளவு மின் அதிர்ச்சி ஏற்படும். அப்போது, டிவி., உள்ளிட்ட மின் சாதனங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், அவை பாதிக்கப்படும். லேண்ட்லைன் தொலைபேசியும் கம்பி மூலம் இணைக்கப் பட்டிருப்பதால், அதன் மூலமும் மின் அதிர்ச்சி ஏற்படும். எனவேதான் மழை பெய்யும் நேரத்தில் டிவி.,யை அணைத்து, லேண்ட்லைனில் பேசாமல் தவிர்த்து, இணைப்புகளை அவற்றில் இருந்து நீக்கியுள்ளனர். இப்போது நாம் பயன்படுத்தும் கம்பி வழி ப்ராண்ட் பேண்ட் - மோடம் இணைப்பு கூட இதே போல்தான். இவற்றின் மூலம் மின்னல் தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
பொதுவாக குறிப்பிட்ட இடத்தில் மின்னல் தாக்கினால், அதே இடத்தில் மற்றொரு மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். எனவே மின்னல் தாக்கிய இடங்களை மக்களுக்கு தெரிவித்து, எச்சரிக்கை செய்யலாம். பொதுவாக, வீடுகளில் இடிதாங்கிக் கம்பிகள் அமைக்கலாம். மழை பெய்யும் போது, மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். ஏரி, குளம், ஆறு என நீர்நிலைகளின் அருகில் நிற்கக் கூடாது. திறந்த வெளியில் நின்று கொண்டிருக்காமல் வீடுகளில் புகுந்து பாதுகாப்பாக இருப்பது நல்லது.
