பாஜகவின் கையாளாக ED... நிர்மலா சீதாராமனுக்கு தகுதியே இல்ல.. அவர முதல்ல நீக்குங்க - ஐஆர்எஸ் அதிகாரி விளாசல்
பட்டியலின ஏழை விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையிலும், அமலாக்கத் துறையை காப்பாற்றும் வகையிலும் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என ஐஆர்எஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் தங்களது நிலம் அபகரிக்க பாஜகவினர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியவர்கள், நிலம் தொடர்பான பிரச்னை காரணமாக பாஜக நிர்வாகியின் தூண்டுதலின் பேரிலேயே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாக அந்த சகோதரர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நிலம் கைப்பற்ற முயற்சிக்கும் பாஜக நிர்வாகி
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஐஆர்எஸ் அதிகாரியும், சென்னை சரக்கு சேவைத் துறை துணை ஆணையருமான பாலமுருகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இரண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் 450 ரூபாய்தான் உள்ளது. மேலும் 2 பேரும் அரசு முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 மற்றும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் பாஜகவின் கையாளாக அமலாக்கத் துறை மாறிவிட்டது என்பதையே காட்டுகிறது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரான பிறகு அமலாக்கத் துறை பாஜகவின் கொள்கை துறையாகவே மாறிவிட்டது.
நிர்மலாவுக்கு தகுதி இல்லை
எனது 30 வருட பணியில் எந்த ஒரு உள்ளூர் அரசியல்வாதியும் எந்த ஒரு சலுகைக்காகவும் எங்களுக்கு அழுத்தம் தந்து பார்த்ததில்லை. இப்போது உள்ளூர் அரசியல்வாதிகளே நேரடியாக அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரமே சான்று என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளவர், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கவே நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை என காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, பட்டியலின ஏழை விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையிலும், அமலாக்கத் துறையை காப்பாற்றும் வகையிலும் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என ஐஆர்எஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்