நாகர்கோவில்,

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததால் ஈரான் அரசால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை மீட்கக் கோரி அவரது உறவினர்கள் இரண்டாவது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 15 மீனவர்கள் பக்ரைன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த 22–10–2016 அன்று மீனவர்கள் அனைவரும் எல்லையைத் தாண்டி வந்ததாக ஈரான் நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதுச் செய்யப்பட்ட மீனவர்கள் அவர்கள் சென்ற விசைப்படகிலேயே இக்கீஸ் என்ற தீவில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நான்கு முறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 15 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அபராதத்தை அவர்கள் கட்டிவிட்டப் பின்னும், அவர்களை ஈரான் அரசு விடுவிக்கவில்லை. எனவே மீனவர்கள் 15 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை கொடுக்கும்போது 15 மீனவர்களின் உறவினர்களும் உடனிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மீட்கக்கோரி ஏற்கனவே அவர்களுடைய உறவினர்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தற்போது கொடுத்துள்ள மனு அவர்களது இரண்டாவது மனு ஆகும். ஏற்கனவே அளித்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இரண்டாவது மனு அளித்துள்ளனர் உறவினர்கள்.