Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் நாடு முழுவதும் ரூ.1980 கோடி முதலீடு…

invest rs-1980s-crore-across-the-country-in-one-day
Author
First Published Dec 3, 2016, 11:54 AM IST


ஒரே நாளில், ஜீவன் அக்சய் உடனடி ஓய்வூதியம் திட்டத்தில் நாடு முழுவதும் ரூ.1980 கோடி முதலீடு கிடைத்துள்ளது என்று எல்.ஐ.சியின் முதுநிலை கிளை மேலாளர் அப்துல் கமால் நாசர் தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதற்கு பின்பு எல்.ஐ.சி.யில் முதலீடுகள் அதகரித்துள்ளன.

திருநெல்வேலி நகரம் எல்.ஐ.சி. கிளை முகவர்கள் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, எல்.ஐ.சியின் முதுநிலை கிளை மேலாளர் அப்துல் கமால் நாசர் தலைமை வகித்தார். உதவி மேலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.

அப்போது, முதுநிலை கிளை மேலாளர் அப்துல் கமால் நாசர் பேசியதாவது:

“பழைய ரூ.500, 1000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்த பின்பு வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களைப் போல எல்.ஐ.சி.யிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

ஒருமுறை பிரிமீயம் செலுத்தும் ஜீவன் அக்சய் உடனடி ஓய்வூதியம் திட்டத்தில் 30 வயது முதல் 100 வயதுடையவர்களிடம் இருந்து முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ஒரு இலட்ச ரூபாயும், அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஓய்வூதியத்தைப் பொறுத்த வரையில் மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என்பதில் எதை தேர்வு செய்கிறோமோ அந்த அடிப்படையில் பாலிசிதாரரின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரரின் வாழ்நாளுக்கு பிறகு அவரது வாரிசுக்கு முதலீட்டு தொகை வழங்கப்படும்.

கணவன் முதலீடு செய்து, மனைவியை வாரிசுதாரராக நியமித்திருந்து, கணவர் இறக்க நேரிட்டால் மனைவிக்கும் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படும். பின்னர் வாரிசுதாரருக்கு முதலீடு தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத் தொகை வாழ்நாள் முழுவதும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.

60 வயதுடைய ஒருவர் ரூ.10 இலட்சம் முதலீடு செய்தால் ஆண்டிற்கு ரூ.70 ஆயிரத்து 350 ஓய்வூதியம் கிடைக்கும். மற்ற நிதி நிறுவனங்களை விட எல்.ஐ.சி. ஓய்வூதியத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி ஓய்வூதியமாகக் கிடைப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டிற்கு வயதை பொறுத்து 6.4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இத்திட்டத்தில் நாடு முழுவதும் ரூ.1980 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

பாலிசியில் சரண்டர் வசதியும் உள்ளது. தென்மண்டல அளவில் ரூ.287 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி கோட்டத்தில் அண்மையில் ரூ.3.50 கோடி ஒரே நாளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் அதிக முதலீடு செய்த முகவர்கள் மூர்த்தி, பாலசுப்பிரமணியன், கந்தசாமி, திருவடி செல்வி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Follow Us:
Download App:
  • android
  • ios