செல்லாத ரூபாய் நோட்டு பிரச்சனையை சீக்கிரம் தீர்க்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்கள் கைகளில் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், செலவுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்காகவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் காத்திருந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று 9-வது நாளாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இப்படி வங்கிகளில் அன்றாடம் அவதிப்படும் மக்கள் ஒரு புறம் இருக்க, கிராமப்புறங்களில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளோ பிரதமரின் திடீர் அறிவிப்பினால் செயல்பட முடியாமல் மூடப்பட்டு விட்டன. திருச்சி மாவட்டத்தில் 148 தொடக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளன. விவசாயிகளுக்கு நகை கடன், விவசாய கடன் போன்றவற்றை வழங்குவது தான் இந்த வங்கிகளின் முக்கிய பணி ஆகும்.
மேலும் கிராமங்களில் ரேஷன் கடைகளையும் இவை நடத்தி வருகின்றன.
செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றிய அறிவிப்பினால் கூட்டுறவு வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சரியான ஆலோசனைகள் வழங்காததாலும், புதிய ரூபாய் நோட்டுகள் பண பரிவர்த்தனைக்கு தரப்படாததாலும் இந்த வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் 11-ஆம் தேதியில் இருந்தே காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக வியாழாக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த நூற்றுக்கணக்கான தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக மத்திய கூட்டுறவு வங்கியால் புதிய நோட்டுகள் வழங்கப்பட வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன், நகைக்கடன் தவணை காலத்தை நீட்டித்து வட்டி மானிய இழப்பு ஏற்படாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்,
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சீக்கிரம் தீர்த்து வைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் துரைக்கண்ணு, மண்டல துணை தலைவர் காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் முத்து, தங்கராஜ், அரிதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்த பிரச்சனையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக மாநில துணை தலைவர் துரைக் கண்ணு கூறினார்.
