முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த "இல்லந்தோறும் இணையம்" திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ள Internet Service Provider உரிமத்தினை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட Internet சேவைகளை தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் வழங்கி வருகிறது.

2-வது கட்டமாக இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்துவதற்காக விருப்பம் கோரும் விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்‍கம் செய்து இம்மாதம் 15-ம் தேதிக்‍குள் விண்ணப்பிக்‍கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்திருந்தது.

இத்திட்டத்தில் சேர்ந்து இணைய சேவை வழங்குவதற்காக இதுவரை 7 ஆயிரத்து 317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்‍கம் செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு அதிக அளவில் வரவேற்பு இருப்பதாலும், இதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தருமாறு பொதுமக்‍களிடம் இருந்து கோரிக்‍கை பெறப்பட்டிருப்பதாலும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 30-ம் தேதிக்‍குள் அனுப்பலாம் என்று கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இணையதளமான www.tactv.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றும், சந்தேகம் ஏதேனும் இருந்தால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-2911-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.