பெண்கள் மற்றும் மதங்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்ற விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

சென்னையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொன்முடியின் கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொன்முடி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல், மத உணர்வைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வரும் மார்ச் 24ம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்ற முடிவையும், சம்மன் அனுப்பியதையும் எதிர்த்து பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகினார். 

புகாரில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தங்கள் தரப்பு வாதத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கவில்லை. இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கு குறித்து உமா ஆனந்தன் 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.