சென்னையில் 10 நிமிடத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் instant delivery திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று zomato நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 10 நிமிடத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் instant delivery திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று zomato நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளரை கவரும் வகையில் டெலிவரி நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி ஜொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்தில் ஃபுட் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டத்திற்கு instant delivery என ஜொமேட்டோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. 10 நிமிடத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் திட்டம் பெருநகரங்களில் அறிமுகப்படுத்தும் போது, விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் அதன் மூலம் உயிரிழப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 இதை அடுத்து கடந்த 21 ஆம் தேதி விளக்கமளித்த சென்னை போக்குவரத்து காவல்துறை இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வரவில்லை எனினும் எதிர்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அந்நிறுவனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தும் என தெரிவித்தது. மேலும் சென்னையிலுள்ள ஜொமேட்டோ நிர்வாக அதிகாரிகளிடம் இந்த அறிவிப்பு தொடர்பாகவும், இதை எவ்வாறு அவர்கள் செயல்படுத்த உள்ளார்கள் என்பதையும் கேட்டறிவதற்கு விரைவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட தனியார் ஃபுட் டெலிவரி நிறுவனங்களுடன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஃபுட் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் நகரின் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணமும் டெலிவரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஜொமேட்டோ நிறுவன பிரதிநிதிகள் சென்னை நகரில் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் instant delivery திட்டம் அறிமுகப்படுத்தப் படவில்லை என தெரிவித்துள்ளது.