கொழிஞ்சாம்பாறை,

மலப்புரம் மாவட்டம் தேத்திப்பாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அபிலாஷ். இவர் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தேத்திப்பாலம் பேருந்து நிலையம் அருகே காவலாளருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது மலப்புரத்தில் இருந்து தேத்திபாலத்தை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. உடனே அந்த காரை இன்ஸ்பெக்டர் அபிலாஷ் மற்றும் உடன் பணியாற்றும் காவலர்கள் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் திடீரென இன்ஸ்பெக்டர் அபிலாஷை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக காவல்துறையினர் தங்களது ஜீப்பில் காரை பின்தொடர்ந்து சென்றனர். 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் அந்த காரை சாலையோரம் நிறுத்தி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து காரில் இருந்த இன்ஸ்பெக்டரை சக காவல்துறையினர் மீட்டனர். மேலும் அந்த காரை சோதனை செய்ததில், அதில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.