திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கணவன்- மனைவி சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் சைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று  இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போடாததால் பணியில் இருந்த காமராஜ் என்ற  இன்ஸ்பெக்டர்  அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த தம்பதியினர் நிற்காமல் சென்றனர்.

இதையடுத்து, தன்னை கடந்து சென்ற இருசக்கர வாகனத்தை காமராஜ் எட்டி உதைத்துள்ளார். இதில் வாகனம் சாய்ந்ததில் கர்ப்பிணி பெண் உமா  சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் உமா  மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர்  சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில் கர்ப்பிணி சாவுக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.