பழைய 5௦௦,1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் பணத்தை வங்கியில் மாற்றவும், ஏடிஎம்களிலிருந்து பணத்தை எடுக்கவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து செல்கின்றனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே பணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ்,
வங்கிகளில் பணம் எடுப்பவரே திரும்ப திரும்ப வருவதால் கூட்டம் கூடுகிறது என்றும், ஒரு முறை பணம் மாற்றுபவர்களின் கையில் மை வைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் பேட்டியளித்த இந்தியன் வங்கி அதிகாரிகள் கூறியதாவது,

மைசூருலிருந்து மை வந்த பிறகே மை வைக்கும் முறை செயல்படுத்தப்படும் என்றும், மை வைக்கப்பட்டால் எத்தனை முறை பணம் எடுக்கப்படலாம் என கூறாததால் குழப்பம் நிலவுகிறது என்றும் தெளிவான வழிமுறைகள் இல்லாததால் மை வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே தமிழகத்திலும், டெல்லியில் உள்ள வங்கிகளிலும் இன்று மை வைக்கும் முறை அமல்படுத்தப்படவில்லை.
மேலும், பணத்தை தங்கள் கணக்கில் செலுத்த வருவோருக்கு மை வைக்கப்படாது என்றும், பணம் மாற்றுவோருக்கு மட்டுமே மை வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
