நாகை மாவட்டத்தில், விவசாய பிரச்சனைகளுக்கான தீர்வு வேண்டி ஜனவரி 10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றியக் குழுக் கூட்டம், கீழையூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பொறுப்பாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.தம்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி.செல்வம், விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அ.நாகராஜன், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.சுப்பிரமணியன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.வி.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2015-16-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

ஊரக வேலை உறுதித் திட்ட கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 10-ஆம் தேதி கீழையூர் ஒன்றியம், மேலப்பிடாகையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.