சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் இந்திய தேசியக்கொடியை ஏற்ற அனுமதி வழங்கக் கோரியும், கச்சத்தீவு செல்வதற்கு பாதுகாப்பு கோரியும், இந்து மக்கள் கட்சி சார்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்து, பின்னர், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு அரசு வசமானது. தமிழக மீனவர்கள்,  அப்பகுதிக்குச் சென்று, மீன் பிடித்து வந்தனர். 

கடந்த 1974 ஆம் ஆண்டு, கச்சத்தீவினை மத்திய அரசு, இலங்கைக்கு கொடுத்துவிட்டது. ஆனாலும், இந்திய மீனவர்கள் அப்பகுதிக்கு சென்று ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

என்றாலும், இந்த ஒப்பந்தத்தை இலங்கை கடைபிடிப்பதில்லை. இதனால், தமிழக மீனவர்கள் பலர் உயிரிழப்புக்கு ஆளாவது, படகுகள், வலைகள் உள்ளிட்டவை சேதமாவதும் நடந்து வருகிறது. மேலும், மீனவர்கள், படகுடன் சிறை பிடித்து செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற, கச்சத்தீவினை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில், கச்சத்தீவில், சுதந்திர தினத்தன்று தேசியை கொடியினை ஏற்ற பாதுகாப்பு அளிக்கும்படி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன், அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அந்த மனுவில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுப்போல், சுதந்திர தினத்தன்று, தேசிய கொடியினை ஏற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.