Indefinite strike by postal workers in Perambalur The demonstration ...
பெரம்பலூர்
பெரம்பலூரில் தபால் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்தியா முழுவதும் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்களை கொண்ட உலகின் மிகப் பெரிய பழமையான தபால்துறையில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 312 தபால் அலுவலகங்கள் கிராம புறங்களில் இயங்கி வருகின்றன.
இந்த துறையில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 2 இலட்சத்து 49 ஆயிரம் பேர் கிராமிய தபால் ஊழியர்கள்.
ஆனால், தற்போது வரை குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.9 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வரும் தபால் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
ஓய்வு பெறும்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வெறும் ரூ.60 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 7-வது ஊதிய குழுவில் கமலேஷ் சந்திரா என்ற அதிகாரி தலைமையிலான கமிட்டி பரிந்துரையில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள் இதுவரை அமல்படுத்தப்பட வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் தலைமை தபால் அலுவலர் ராஜூ தலைமை தாங்கினார்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் ஒருபிரிவான கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (என்.எப்.பி.இ.) மாநில பொருளாளர் விஷ்ணுதேவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் திரளான தபால் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 130 கிராம தபால் அலுவலகங்களைச்சேர்ந்த 250 தபால் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு தபால் அலுவலகங்கள் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் மட்டும் பணிபுரிந்தனர். ஆனால், தபால் பட்டுவாடா, உள்ளூர் மணியார்டர், வெளிநாட்டில் இருந்து பெறும் பணம் பெறுவது, தபால் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
