increase ration rice to 30 kg agriculture workers demand

திருவாரூர்

ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை 30 கிலோவாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டாவது நாளாக விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் திருவாரூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நேற்று முன்தினம் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

“நூறு நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் அமல்படுத்தி, தினக் கூலியாக ரூ.400 வழங்க வேண்டும்.

ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வறட்சி நிவாரணமாக விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

குறுவை தொகுப்புத் திட்டத்தில் கையால் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கள் இந்த காத்திருப்புப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, கட்சியின் நகரச் செயலாளர் ராமசாமி, ஒன்றியச் செயலாளர் இடும்பையன் உள்பட பலர் பங்கேற்றனர்.