செய்யாத்துரையின் வீடு, எஸ்பிகே குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் சுமார் 80 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்பிகே கட்டுமான நிறுவனக் குழுமம் தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியில், இவரது நிறுவனம் காண்ட்ராக்ட் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது தவிர,  அரசு சார்ந்த பல பணிகளை எஸ்பிகே நிறுவனக் குழுமம் செய்து வருகிறது.

இன்று  காலை 6.30 மணியளவில் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியிலுள்ள செய்யாத்துரையின் வீட்டுக்குள் வரி ஏய்ப்புப் புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நுழைந்தனர். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் காரணமாக, வீட்டைச் சுற்றி காவல் துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  "எஸ்பிகே" குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிரடியாக  சோதனை நடந்துவருவதாகவும், இதுவரை சுமார் 80 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்யாத்துரையின் வீடு, எஸ்பிகே குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான அருப்புக்கோட்டை நூற்பு ஆலையிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர் வருமான வரித் துறையினர். இந்த நிறுவனத்தின் பின்னணியில் ஆளும் கட்சியினர் உள்ளனர் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த வாரம் திருச்செங்கோட்டிலுள்ள கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது வருமான வரித் துறை.

இந்நிறுவனம், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சாலைப் பணிகளுக்கான காண்ட்ராக்டர்களில் ஒருவரான செய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்பிகே நிறுவனக் குழுமத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.