திருச்சி,
கோடிக்கணக்கில் முறைகேடு செய்த எஸ்.ஆர்.எம்.யு. மாநில துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் உட்பட திருச்சி இரயில்வே கோட்ட டிக்கெட் ஆய்வாளர்கள் 13 பேர் முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேட்டில் மொத்தம் 39 பேர் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி இரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு ஆய்வாளர்களாக பலர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரயில்களில் சென்று பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
வெளியூர்களுக்கு பரிசோதனை பணிக்காக செல்லும்போது, அதற்குண்டான பயணப்படியை பெறுவார்கள். இந்நிலையில் திருச்சி கோட்டத்தில் பணியாற்றி வந்த டிக்கெட் ஆய்வாளர்கள் பலர் ஆய்வுக்கு செல்லாமலேயே, வெளியூர்களுக்கு பரிசோதனைக்கு சென்றதாக போலி கணக்கு காண்பித்து பயணப்படி தொகையை பெற்று வருகின்றனர் என்று புகார்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
இந்த புகார்களின் மீது விசாரணை நடத்த திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் விசாரணைக்குழுவை நியமித்தார். இந்த குழுவினர் நடத்திய விசாரணையில் இந்த புகாரின் அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த குழுவினர் விசாரணை அறிக்கையை இரயில்வே கோட்ட மேலாளரிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை தெற்கு இரயில்வே முதன்மை வணிக மேலாளர் அஜீத் சக்சேனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த புகாரில் திருச்சி இரயில்வே கோட்டத்தில் 39 டிக்கெட் ஆய்வாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.
இதையடுத்து முதல் கட்டமாக புகாரில் சிக்கிய 13 டிக்கெட் ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து, தெற்கு இரயில்வே முதன்மை வணிக மேலாளர் அஜீத் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 13 பேரும் திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வருவதும், இவர்கள் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் எஸ்.ஆர்.எம்.யு. மாநில துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரனும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி கோட்ட இரயில்வே வணிக மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் 6 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, 4 பேர் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் தற்போது முறைகேடு புகார் தொடர்பாக டிக்கெட் ஆய்வாளர்கள் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இரயில்வே வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
