தமிழ்நாட்டின் அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கும் வடகிழக்குப் பருவமழை, மாநில அளவைக் காட்டிலும் தருமபுரியில் 30 சதவீதம்கூட பெய்யவில்லை என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் சிறுதானிய உற்பத்திக்குப் புகழ்பெற்ற மாவட்டம். அதுதவிர, பயிறு வகைகளான கொள்ளு, கொண்டக்கடலை போன்றவை இந்தப் பருவத்தில் அதிக விளைச்சலைத் தரக் கூடியவை.

ஆனால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இவற்றை விவசாயிகள் விதைக்கவில்லை. இதனால், நிலங்கள் தரிசாகவே கிடந்தன. மேலும், இந்தப் பருவத்தில் வெட்டக் கூடிய வாய்ப்புள்ள பணப்பயிராக கரும்பு மட்டுமே இருக்கிறது.

கூட்டுறவு கரும்பு ஆலைகளில் முறையாக கரும்பு அரைவைப் பணிகள் தொடங்கப்பட்டாலும், கரும்பு வரத்து வெகுவாகக் குறைந்தே காணப்படுகிறது. 

பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கரும்புப் பயிர் ஓரிரு நாள்கள் பெய்த லேசான மழையால் தோகைகள் பச்சையாகக் காணப்பட்டாலும், உள்ளே அவற்றின் விளைச்சல் தன்மை குறைந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இனிமேல்தான் நடவு மேற்கொள்ள வேண்டிய மரவள்ளிக் கிழங்கு போன்றவையும் இந்தப் பருவத்தில் சாத்தியமில்லை, துவரை பூத்திருந்தாலும் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை முழுமையான நம்பிக்கையோடு சொல்ல முடியாது என்கின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தெரிவித்ததாவது:

“தமிழ்நாட்டின் அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கும் வடகிழக்குப் பருவமழை, மாநில அளவைக் காட்டிலும் தருமபுரியில் 30 சதவீதம்கூட பெய்யவில்லை. எனவே, மழையை நம்பி செய்ய வேண்டிய மேட்டுப் பயிர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.

எனவே, சாகுபடி தொடங்கி கருகிய பயிர்களுக்கு மட்டுமின்றி, மழையின்றி சாகுபடி தொடங்காத தரிசாகப் போட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அதோடு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று சின்னசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலரும், தருமபுரி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தருமபுரி மாவட்டத்தில் வறட்சி தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு நடத்தி உள்ளனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு மாநில உயர்கல்வித் துறை கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் சில இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் மேலாக விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை முழுமையான அறிக்கையாக ஓரிரு நாள்களில் அளிக்குமாறு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திச் சென்றுள்ளார்.