In the Archaeological Survey of Renaissance Inscriptions of the 10th Century ...

தூத்துக்குடி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொல்லியல் ஆய்வின்போது கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதான வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என்று பேராசிரியை பிரியா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பேராசிரியை பிரியா கிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோர் கள ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேராசிரியை பிரியா கிருஷ்ணன் கூறியது:

"திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு எதிரில் பழமை வாய்ந்த சிற்றாறு பாய்கிறது. இந்த சிற்றாறு படித்துறைக்கு அருகில் மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அதனுள் சிவலிங்கமும் சிறிய நந்தி ஒன்றும் உள்ளது.

மண்டபத் தூணில் ஒருவர் வணங்கிய நிலையில் உள்ள புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டபத்தின் இடது புறத்தில் ஆறு பாயும் பகுதியில் நடராஜர் புடைப்பு சிற்பமும், பசு சிவலிங்கத்துக்கு பால் சொரிவது போல் புடைப்பு சிற்பமும், ஒரு ஆண் வணங்கும் நிலையில் ஒரு சிற்பமும், இரண்டு பெண்கள் சிற்பமும் புடைப்பு சிற்பங்களாக காணப்படுகின்றன. அவை நீரால் தேய்ந்துள்ளது.

ஆற்றின் மதகு ஒன்றிலும், கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரிதான பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு இரண்டு காணக் கிடைக்கிறது.

மீதி கல்வெட்டுகள் அனைத்தும் 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த சுவரிலும் மதகிலும் காணப்படும் கல்வெட்டுகள் மூலமாக சுந்தரபாண்டியனின் மெய் கீர்த்தியும், தேவதானம், இறையிலி, பிரம்ம தானம் போன்ற நிலதானம் பற்றியும், வெட்டி, பாட்டம், அந்தராயம், புரவரி, கடமை காரிய வாராச்சி ஆகிய வரிகள் குறித்தும் இடம் பெற்றுள்ளன.

நல்லூர், குறிச்சி, மதுரோதய நல்லூர், பனையூர் என்ற ஊர் பெயர்களும், பல்லவராய சுந்தரபாண்டிய பேரேரி, விக்ரம பாண்டி பேரேரி போன்ற ஏரிகள் பற்றியும், விரத முடித்தான், அரையன், நடுவிநங்கை போன்ற குடிமக்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நடுவிநங்கை என்ற பெண்மணி நந்தாவிளக்கு ஒன்றும், ஆடு ஐம்பது ஆகியவற்றைத் தானமளித்ததையும் கல்வெட்டு தெரிவிப்பதால் அந்தக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தமையும், பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துகளை அறச்செயல்களுக்கு பயன்படுத்தியமையும் அறிய முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.