In tamilnadu there are 70 more sand quarry

தமிழகத்தில் மேலும் 70 மணல் குவாரிகள் திறப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் குவாரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் எனவும், ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அதை தொடர்ந்து 7 புதிய மணல் குவாரிகளை திறக்க உத்தரவிட்டார். ஆற்றங்கரை அருகே விற்பனை நிலையம் அமைத்து மணல் விற்கப்படும் எனவும், மணலுக்கான தொகை கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து இன்னும் மணல் தட்டுப்பாடு எழுவதால் மேலும் 70மணல் குவாரிகளை அரசு திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை தொடங்க அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆற்று மணலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான் எனவும், ஆனால் நடவடிக்கைகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் எடுக்க வேண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் குறித்து அக்கறை இல்லை எனவும், கொள்ளிடம் ஆற்றின் அருகே ஏன் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காகக் கூட நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், இத்தகைய சூழலில் மேலும் 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு குறைந்து நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மணல் குவாரிகள் இன்னும் 3 ஆண்டுகளில் மூடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டு 35 நாட்களாகியும் இதுவரை எந்த மணல் குவாரியும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

எனவே, 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், படிப்படியாக மணல் குவாரிகளை மூடி, தமிழகத்தை மணல் குவாரி இல்லாத மாநிலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.