பெரம்பலூர்

ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 46 ஆயிரத்து 630 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாத தடுப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நேற்று முதல் கட்டமாக தொடங்கியது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், "பெரம்பலூரில் முதல் கட்டமாக 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த முகாம்களில் பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 387 மையங்களில் 46 ஆயிரத்து 631-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 602 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 11.3.2018 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது" என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் சம்பத், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி,

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.