சூரமங்கலம்,

சேலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெவ்வேறு இடங்களில் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதில் கிணற்றில் விழுந்து இருவர் பலியாயினர்.

சேலம் கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (40), தொழிலாளி. இவர் சனிக்கிழமை இரவு புத்தாண்டை கொண்டாட அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுப் பகுதிக்கு நண்பர்களுடன் மது குடிக்கச் சென்றுள்ளார். அந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் ஏறி உட்கார்ந்து நண்பர்களுடன் சந்திரகுமார் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, போதை அதிகமானதில் சுவரில் அமர்ந்திருந்த சந்திரகுமார் பின்பக்கமாக சாய்ந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

நேற்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அதில் சந்திரகுமார் பிணமாக மிதந்தார். உடனே, காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் இறங்கி சந்திரகுமார் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடல் உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சூரமங்கலம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே போல் திருவாக்கௌண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (40). தொழிலாளி. இவர் நேற்று புத்தாண்டை கொண்டாடும் வகையில் காலையிலே மது அருந்தியுள்ளார். பின்னர், அவர் குளிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்குச் செல்வதாக வீட்டில் தெரிவித்துள்ளார். அவரை அங்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதனை பொருட்படுத்தாமல் குருசாமி குளிக்கச் சென்றபோது போதையில் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனையறிந்த சூரமங்கலம் காவலாளர்கள் அங்கு வந்து உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாகவும் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தாண்டு வரவேற்கிறோம் என்று கூறி மதுகுடித்து இப்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இறந்து, இவர்களது குடும்பத்திற்கு மீளாத் துயரத்தை அளித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.