வெம்பாக்கம் அருகே திருவிழா யார் நடத்துவது என்பதில் இருதரப்பினருக்கு இடையே நீயா? நானா? போட்டியில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலைப் பூட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
செய்யாறை அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரிஅரபாக்கம் கிராமத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு அரிஅரபாக்கம் கிராம மக்களும், நமண்டி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் வழிபாடு நடத்தி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையதுறையினர் கோவிலுக்கு பூட்டு போட்டனர்.
இதுதொடர்பாக செய்யாறு உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 5–ஆம் தேதி கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டம், ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க கோவில் திறக்கப்படவில்லை. இருப்பினும் நமண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தொடர்ந்து கோவிலை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 25–ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பொன்னி, செய்யாறு உதவி ஆட்சியர் பிரபுசங்கர், தாசில்தார் பெருமாள், கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு ரங்கராஜன், துணை காவல்துறை சூப்பிரண்டுகள் திவ்யா (செய்யாறு), சந்திரன் (வந்தவாசி), அசோக்குமார் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் ராஜா கோவிலை திறந்து வைத்தார்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு கோவில் முன்பாக ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் திறக்கப்பட்டதை அறிந்த அரிஅரபாக்கம் கிராம மக்கள் ஏராளமானோர் தாசில்தார் பெருமாள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம், நாங்கள் கட்டிய கோவிலை எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எப்படி திறக்கலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை அரிஅரப்பாக்கம் கிராம மக்கள் திரண்டு வந்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது எப்படி அதிகாரிகள் ஒரு தரப்பினருக்கு சாதகமாக கோவிலை திறக்கலாம்? என்று கோவில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு ரங்கராஜன், தாசில்தார் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் கோவிலை நிர்வகிக்கும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜா மீண்டும் கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தார். அதையடுத்து அரிஅரபாக்கம் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து கோவில் முன்பு பாதுகாப்புக்காக காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
