In Adiyapedruku people took bath in Mettur Cauvery River and Sheep chickens are sacrificed ...

சேலம்

ஆடிப்பெருக்கில் மேட்டூர் காவிரி ஆற்றில் அடியார்கள் புனித நீராடி, அணைக்கட்டு முனியப்பன் சாமிக்கு ஆடு, கோழி பலியிட்டனர்.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி தமிழகம் வழியாக பாய்ந்தோடி கடலில் கலக்கிறது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைக்கவும், வெள்ள சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது.

இந்த அணையின் மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தி பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.

விவசாயத்திற்கு இன்றியமையாத தண்ணீரை அளிக்கும் காவிரி தாயை ஆடிப்பெருக்கில் விவசாயிகள் வழிபடுவர். இதுமட்டுமின்றி அடியார்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆடிப்பெருக்கில் காவிரி பாய்ந்தோடும் பகுதிகளுக்குச் சென்று புனித நீராடி காவிரி அன்னையை வழிபடுவர்.

ஆடிப்பெருக்கான நேற்று ஏராளமான அடியார்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகாலையில் இருந்தே மேட்டூருக்கு வந்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மேட்டூர் காவிரி பாலம், அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேட்டூர் அனல்மின்நிலைய புதுப்பாலம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வளத்தையும் அளிக்க வேண்டும் என காவிரி தாயை வழிபட்டு புனித நீராடி தங்கள் இல்லங்களுக்கு திரும்பினர்.

ஒரு சிலர், காவிரியில் புனித நீராடிய பிறகு, மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்குச் சென்று ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு பொங்கல் வைத்து முனியப்பனை வழிப்பட்டனர்.

ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள், மேட்டூர் அரசு மருத்துவமனை வரை அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லுமாறு வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டு இருந்தது. கொளத்தூர் செல்லும் பேருந்துகள் பொன்னகர், குள்ளவீரன்பட்டி வழியாக இயக்கப்பட்டன.

வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் தூக்கணாம்பட்டி நகராட்சி பள்ளியிலும், மேட்டூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.