implement the scheme linking Tamaraparani with Karumeniyaru and nambiyaru

திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் உபரிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அரசு அறிவித்துள்ள தாமிரபரணி ஆற்றை கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வெள்ள உபரிநீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வெள்ள உபரிநீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி, பொருளாளர் பூபதி பாண்டியன், துணைத் தலைவர் அந்தோணி தாஸ், துணைச் செயலாளர் பாலமேனன், அந்தோணி பிச்சை மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் உபரிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு அறிவித்துள்ள தாமிரபரணி ஆற்றை கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுத்து, சாத்தான்குளம், நாங்குநேரி, திசையன்விளை, திருச்செந்தூர், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பல்வேறு குளங்களுக்கு கால்வாய் அமைத்துக் கொண்டுச் செல்ல ஏற்கனவே அரசு அறிவித்துள்ள திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

விவசாய துறை உதவியுடன் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம், கசிவுநீர் குட்டை, சமுதாய கிணறுகள் அமைத்துதர வேண்டும்.

விவசாயிகளுக்கு தரமான விதைகள், நவீன விவசாய கருவிகளை மானியத்துடன் வழங்க வேண்டும்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாற்றில் வெள்ள உபரிநீரை எம்.எல்.தேரிக்கு கொண்டுச் செல்லும் திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும்.

மழைநீர் சேமிப்புப் பற்றி மக்கள், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.