அன்னூரில் கள்ளக்காதல் ஜோடி, தங்களது உறவை கண்டறிந்த பாட்டியை தலையணையால் அமுக்கிக் கொலை செய்தனர். பின்னர் கணவரையும் கொலை செய்ய முயன்றபோது அவர் தப்பிய நிலையில், போலீஸ் விசாரணையில் இருவரும் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய் மெட்டில்டா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். இவர்களுடன் பாட்டி மயிலாத்தாள் (60) வசித்து வந்தார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கிளைகள் கர்நாடகாவில் உள்ளது.

கள்ளக்காதல்

அதில் ஒரு கிளை அலுவலகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக 2 பேரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாகேஷ் கர்நாடகாவில் இருந்து தனது நண்பரின் காரை எடுத்துக்கொண்டு அடிக்கடி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

நேரில் பார்த்த மயிலாத்தாள் கொலை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் தங்கிய நிலையில் ஜாய் மெட்டில்டாவின் கணவர் லோகேந்திரன் வசமாக சிக்கினார். இதுகுறித்து லோகேந்திரன் நிதி நிறுவனத்தில் புகார் அளித்ததை அடுத்து 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி லோகேந்திரன் மதுரைக்கு சென்றார். அப்போது ஜாய் மெட்டில்டா நாகேஷை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகிய 2 பேரும் தலையணையால் முகத்தை அமுக்கி மயிலாத்தாளை கொலை செய்தனர். பின்னர் மயிலாத்தாள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக ஜாய் மெட்டில்டா நாடகமாடி மயிலாத்தாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து கணவர் லோகேந்திரனையும் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 22ம் தேதி நாகேஷை ஜாய் மெட்டில்டா வரவழைத்தார். 23ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வீட்டில் லோகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். ஜாய் மெட்டில்டா கதவை திறந்து வைத்து நாகேஷை உள்ளே வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து லோகேந்திரனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன் உயிர் தப்பினார். நாகேஷ் பின்பக்க கதவு வழியாக தப்பி அருகில் இருந்த தோட்டத்து வழியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுவிட்டார். இது குறித்து லோகேந்திரன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜாய் மெட்டில்டா கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாய் மெட்டில்டாவை பார்க்க மீண்டும் நாகேஷ் கர்நாடகாவில் இருந்து கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு காரில் வந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்தனர். அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் ஜாய்மெட்டில்டாவுடன் சேர்ந்து மயிலாத்தாளை கொலை செய்ததுடன் லோகேந்திரனையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகிய 2 பேரையும் அன்னூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.