புதுக்கோட்டை அருகே அண்ணியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த அண்ணனை அவரது சொந்த தம்பியே சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அவருக்கு உதவியதாக அண்ணியும் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை  மாவட்டம்  காரையூரை சேர்ந்தவர் சன்னாசி. அவரது மனைவி விஜயா. இவர்கள் இருவருக்கும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் நால்வரும் விஜயாவின் ஊரின நமணசமுத்திரத்தில் வசித்து வந்தனர். அவர்கள் இருவருமே கூலி வேலை செய்து வந்தனர்.

அவர்களது வீட்டுக்கு சன்னாசியின் தம்பி கருப்பையா அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கருப்பையாவுக்கும், அவரது அண்ணி விஜயாவுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

சன்னாசி வேலைக்கு சென்றதும் கருப்பையா அண்ணன் வீட்டுக்கு வந்து தனது அண்ணியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு நாள் சன்னாசி தற்செயலாக வீட்டுக்கு வந்தபோது தம்பி கருப்பையாவும், மனைவி விஜயாவும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சன்னாசி கருப்பையாவை அடித்து விரட்டியதுடன் மனைவி விஜயாவையும் கண்டித்துள்ளார்.

ஆனால் கருப்பையா- விஜயா இடையே கள்ளத் தொடர்பு தொடர்ந்துள்ளது. அதே நேரத்தில்  சன்னாசி உயிருடன் இருந்தால் தங்களால் சந்தித்துக் கொள்ள முடியாது என நினைத்த இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி அண்ணன் வீட்டிருகே பதுங்கிருந்துள்ளார். இரவு சன்னாசி, தனது நண்பர் சங்கர் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக விஜயாவிடம் கூறிச்சென்றுள்ளார். அவர் வீட்டை விட்டு சென்றதுமே விஜயா செல்போன் மூலம் கருப்பையாவுக்கு  தகவல் கொடுத்துள்ளார்.

அப்போது சன்னாசி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரியல் எஸ்டேட் பிளாட் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மறைந்திருந்த கருப்பையா அண்ணனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டி கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த காரையூர் போலீசார் சன்னாசியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கருப்பையாவும், விஜயாவும் சன்னாசியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது சன்னாசியின் மூன்று குழந்தைகளும் அநாதைகளாக உள்ளனர். கள்ளக் காதலால் கூடப்பிறந்த அண்ணனையே ஒருவர் கொன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.