தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை மூட வலியுறுத்தியும் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், வணிகர்களும் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் மூடப்பட்ட மதுக் கடைகளுக்கு மாற்றாக குடியிருப்புப் பகுதிகளில் அவற்றை திறக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பதிக்கப்படுவதால் அதனை மூட வலியுறுத்தியும் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

இன்றும் நாளையும் இந்த உண்ணாவிரத போராட்டம் அமைதியான முறையில் நடைபெரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.