If you struggle there is no pay TN government answered in court
ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செப். 14 ஆம் தேதி க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு நீதிபதி கிருபாகரன் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அரசு ஊழியர்களின் போரட்டத்திற்கு அரசு இடம் தரக்கூடாது என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது, அரசு ஊழியர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
மேலும், அரசியல், சாதி, மத ரீதியான அமைப்புகள் போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஆசிரியர்கள் போராட்டத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதால் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 75 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனவும் அந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஓய்வு பெற்ற பின்னரும் ஆசிரியர்கள் எப்படி சங்க உறுப்பினர்களாக உள்ளனர்? நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
உங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் வேலை நிறுத்தம் செய்வீர்களா? என்று ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கூறியது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது தமிழக அரசின் பதில் மனுவில் தகவல்.
பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிக்கு வராத நாட்களை அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதி ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
