If you conduct sand quarries like Tasmac the government will get Rs 20000 crore per annum

நாமக்கல்

டாஸ்மாக் நடத்துவதுபோல தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தையும் அரசு அலுவலர்கள் நேரடியாக மணல் விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அரசிற்கு வருவாய் கிடைக்கும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகரன், நாமக்கல் மாவட்ட மணல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், “நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து மணல் குவாரிகளையும் திடீரென நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது.

உடனடியாக மூடப்பட்ட அனைத்து குவாரிகளையும் திறக்க கேட்டுக் கொள்வது.

மணல் லாரிகளுக்கு என்று தனியாக வர்ணம் பூசவேண்டும்,

கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மணல் கடத்தும் தேசிய பெர்மிட் லாரிகளுக்கு மணல் வழங்குவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலாளர் ராஜகோபால், நாமக்கல் மாவட்ட மணல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கந்தசாமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் நிறைவுற்றதும் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் 7 குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தாமல் ஆட்கள் மூலம் மணல் அள்ள வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள குவாரிகளை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடிவிட்டது. இதற்குக் கூட்டமைப்பின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் இலட்சக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளைத் திறந்து அரசே நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபடவேண்டும்.

கடந்த 2003–ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டபோது, அரசு அதிகாரிகளே நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட்டனர். பின்னர், லோடிங் ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் மூலம் மணல் இரண்டாம் விற்பனை செய்ததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது.

அரசு மணலை விற்பனை செய்கிறது. அதனை மணல் லாரி உரிமையாளர்கள் நேரடியாக பெற்றுக் கொள்கிறோம். அந்த மணலை அள்ளி போடுவதற்குதான் ஒப்பந்ததாரர்களை அரசு கடந்த 13 ஆண்டுகளாக நியமனம் செய்திருந்தது. அவர்கள் வேண்டாம் என நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம்.

மணல் விற்பனையில் கடந்த 2014–15–ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஒப்பந்ததாரர்கள் வேண்டாம் என கூறி வருகிறோம்.

தமிழகத்தில் மணல் குவாரிகள் மூலம் தற்போது ஆண்டுக்கு ரூ.230 கோடி கிடைத்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ளதுபோல, லாரி உரிமையாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசே நேரடியாக மணலை வழங்கினால், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

டாஸ்மாக் நிர்வாகத்தை நடத்துவதுபோல மணல் குவாரிகள் அனைத்தையும் அரசு அலுவலர்கள் மூலம் நடத்தலாம். மேலும், மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க அனைத்து லாரிகளுக்கும், ஒரேவரிசை, ஒரேஅளவு என்ற அடிப்படையில் மணல் வழங்க வேண்டும்.

வருகிற 14–ஆம் தேதிக்குள் மணல் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, மணல் குவாரிகளை திறந்து அரசு நேரடியாக மணல் வழங்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால், தமிழகத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றுதிரட்டி, வருகிற 15–ஆம் தேதி கூட்டமைப்பின் சார்பில் தமிழக ஆளுநரைச் சந்திப்போம்.

அப்போது, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்பதை விளக்கி மனு அளிக்கவுள்ளோம்” என்று அவர் பேசினார்.