மதுரை 

ஜி.எஸ்.டி. விதித்தால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.38-ஆக இருக்கும் என்பதால் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "ஜி.எஸ்.டி.யின் முக்கிய நோக்கம் ஒரே தேசம், ஒரே வரி என்பதுதான். ஆனாலும் இதுவரை பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரவில்லை. 

அதன் காரணமாக அவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். 

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை பாதியாக குறையும். கடந்த செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.55 ஆக இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தின்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 சதவீதம் வரி விதித்தால் டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.38–க்கும், 18 சதவீத வரி விதித்தால் 40.05 ஆகவும், 28 சதவீத வரி விதித்தால் 43.44 என்றும் அதன் விலை குறையும். 

எனவே, பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.