பெரம்பலூர்

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் கூட்டுறவு சங்க அதிகாரிகளை தாக்குதல், அலுவலகத்தில் அதிகாரியை உள்ளே வைத்து பூட்டுதல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால் மீண்டு ஒருமுறை இப்படி நடந்தால் முன்னறிவிப்பின்றி தேர்தல் பணியில் இருந்து விலகிடுவோம் என்று அதன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது: 

"தமிழகம் முழுவதும் நான்கு கட்டமாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 20-ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் முறையாக தேர்தல் நடத்திடவும், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

ஆனால், நடைபெறும் தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினரால் தாக்குதல், அலுவலகத்தில் அதிகாரியை உள்ளே வைத்து பூட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் மற்றும் அலுவலக தளவாடப் பொருள்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட  செயல்கள் பல்வேறு இடங்களில் அரங்கேறுகின்றன. 

இதனால், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் உள்ளூரில் வசிப்பதோடு, சங்க விவகார எல்லைக்கு உள்பட்டவராகவும் உள்ளனர். அதனால், தேர்தலுக்கு பின்னரும் பல இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். 

இந்த  ஆர்பாட்டத்துக்குப் பிறகும் தேர்தல் அலுவலர்களாக பணிபுரிவோர் மீது தாக்குதல் தொடருமானால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்தல் பணியில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவகுமார், மாவட்டச் செயலர் மருதமுத்து, மாவட்ட துணைத் தலைவர் அரப்பளி, மாவட்ட இணை செயலர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர், இவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.