திருவாரூர்

எடப்பாடி அரசு மீது நம்பிக்கையை திரும்ப பெற்ற பிறகு ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத் தலைவரை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்றும் அங்கேயும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றார்.

விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம், “இன்றைக்கு நாட்டில் எப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதை எல்லாம் இங்கு எடுத்துச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, அடுத்த முறை நான் வரும்போது இப்படி வராமல், எப்படி வர வேண்டும் என்று சொன்னார்கள்.

முதலமைச்சராக இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இல்லையென்றாலும் சரி, நான் என்றைக்கும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்கக் கூடியவன்.

பொறுப்புக்கு வர வேண்டும், பதவிக்கு வர வேண்டும், சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்டதல்ல இந்த இயக்கம். பொறுப்புகள் என்பது, பதவிகள் என்பது மக்களுக்கு பணியாற்ற, மக்களுக்கு தொண்டாற்ற மட்டுமே.

திமுக ஏதோ சூழ்ச்சி செய்து, சதி வலையைப் பின்னி, இப்படியெல்லாம் எதையும் செய்யவில்லை. தலைவர் கருணாநிதியை பொறுத்தவரையில், திமுக என்றைக்கும் கொல்லைப் புறமாக ஆட்சிக்கு வராது, மக்களுடைய ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வரும் என்பதை இங்கு அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொள்கிறேன்.

அவர்களாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. விரைவில் அவர்களாகவே கவிழத்தான் போகிறார்கள். இன்று (நேற்று) காலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த செய்தி, இங்கு மேடையில் அமர்ந்திருந்தபோது எங்களுக்கு வந்தது.

அவர்களிடத்தில் உறுதி தந்திருந்தாலும், எப்போதும் ஆளுநர் உறுதியளிப்பது வழக்கமாக இருந்தாலும், அது நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்விக்குறி. எனவே, அது நிறைவேற்றப்படுமா? அல்லது நிறைவேற்றப்படாதா? என்பது எங்களுக்கு முக்கியமல்ல. ஜனநாயகம் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இல்லையென்றால், அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு வரும். அவரைச் சந்தித்தும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாக நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மிரட்டவோ, அச்சுறுத்தவோ இதையெல்லாம் சொல்லவில்லை. இன்றைக்கு சின்னாபின்னமாகி உள்ள நாட்டை காப்பாற்ற, மக்களைக் காப்பாற்றவே இதையெல்லாம் சொல்கிறோம்.

‘நீட்’ தேர்வு பிரச்சனையில் நமது உரிமை போய்விட்டது. கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோய்விட்டது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதால், ஜனநாயக ரீதியில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 பேர் ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் ஆளுநரை நேரில் சந்தித்து, “முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை, எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும், அதற்கு ஆளுநர் உரிய வழியை ஏற்படுத்த வேண்டும்” என்று தனித்தனியாக கடிதம் தந்துவிட்டு வந்திருக்கிறார்கள்

அந்த 19 பேருடன் முடிந்ததா என்றால், அதுவுமில்லை. நாள்தோறும் 2 பேர் வேறு அணியில் சேர்ந்தார்கள், ஆதரவு தந்தார்கள் என்று செய்திகள் வருகின்றன. இதற்கிடையில் தி.மு.க. சார்பில் நாமும் இந்த பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். ஆக, மெஜாரிட்டியை இழந்த நிலையில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் ஒரு புதிய பிரச்சனையை மேற்கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால், தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்த நிலையில் கடந்தமுறை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது, காவல்துறை மானியத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, பல்வேறு பிரச்சனைகளை நான் எடுத்துரைத்த நேரத்தில், “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குட்கா விற்பனை நடக்கிறது, அதற்கு ஆதாரம் இங்குள்ளது” என்று சொல்லி, குட்கா பொருட்களை எடுத்து அவையில் காட்டினேன். என்னோடு தி.மு.க. உறுப்பினர்கள் பலர் அதனை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டினார்கள்.

அதில் என்ன தவறு? குட்கா திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது, அதை பலரும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், இதனால் பலருக்கு புற்றுநோய் வருகிறது, அதனால் பலர் இறந்து போகிறார்கள், இளைஞர்கள் அதற்கு அடிமைகளாகும் நிலை உள்ளது, ஆகவே, அதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அதற்கான ஆதாரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லும் நிலையில், ஜனநாயக நெறிப்படி சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினேன்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஜூலை மாதம் 19-ஆம் தேதியன்று, அந்த குட்கா பொருள் பிரச்சனையை நான் எடுத்துக் கூறினேன். அது நடந்து முடிந்து நேற்றோடு 40 நாட்கள் முடிந்து விட்டன.

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அது தவறென்று அடுத்த நாளோ, மறுநாளோ சொல்லியிருந்தால், ஒரு வாதத்துக்காக நாம் ஏற்கலாம். ஆனால், 40 நாட்கள் கழித்து இப்போது அதைக் கையில் எடுத்துக்கொண்டு, “உரிமைக்குழுவிடம் அனுப்புகிறோம், நடவடிக்கை எடுக்கப்போகிறோம்” என்று சொல்லி, நாளை அதற்காக ஒரு கூட்டத்தை கூட்ட இருக்கிறார்கள்.

அந்த உரிமைக்குழுவில் நானும் ஒரு உறுப்பினர். தி.மு.க.வைச் சேர்ந்த மதிவாணன், பெரியகருப்பன் என நான்கைந்து பேர் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம். எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால், எனக்கு அனுப்பவில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால், இதற்காக திமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்கிவிட்டால், அதன்பிறகு, சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நிலை வரும்போது, திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க விடாமல் தடுத்து, எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்துக் கொள்ளும் என்ற சதி திட்டத்தோடு, இதை முயற்சி செய்கிறார்கள். நான் உறுதியாக, நிச்சயமாக சொல்கிறேன், அது நடக்காது. சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தி.மு.க. தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.