சென்னை மாநகராட்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி லலிதா தனது மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்து அனைவரையும் வியப்பபில் ஆழ்த்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கூடாது?  என்று அண்மையில்  ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.  அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இனிமேல் தங்கள் குழந்தைகளை  அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர் லலிதா.  கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்கேஜி  வகுப்பில் நேற்று சேர்த்தார்.

அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் லலிதா  தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளார்.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் தான் இந்த முடிவை எடுத்ததாக லலிதா குறிப்பிட்டார்.

தன்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்தார்