காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை செய்வேன் என்று தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் கூறினார்.
சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள இந்திய அரசு கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு மன்னர் ராஜேந்திரசோழன் உருவப்படத்தை அர்ப்பணித்த தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடந்தது. விழாவிற்கு சென்னை தமிழ்ச்சங்க தலைவர் தியாக இளங்கோவன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட ஆளுநருக்கு, சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் தமிழ்த்தாய்சிலை மற்றும் வாள்நாள் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ், “சென்னை சட்ட கல்லூரியில் நான் படித்த போது திருவள்ளுவர் பற்றி தெரிந்து கொண்டேன். உலக மக்களுக்கு திருக்குறள் வழிகாட்டியாக உள்ளது. கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பது அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சிறப்பு ஆகும். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மராட்டிய மாநில கவர்னர்கள் ஒத்துழைப்புடன் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ முழு முயற்சி மேற்கொள்ளப்படும். திருக்குறளை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் கல்வியில் கொண்டுவர வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்து எனக்கு தெரியும். இருப்பினும் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண என்னால் முடிந்தவற்றை செய்வேன். தமிழ்மொழி மிக பழமையான மொழி. செம்மொழி தரத்தை தமிழ் அடைவதற்கு அதனுடைய மிக சிறந்த இலக்கியங்களும், இலக்கணங்களும் காரணம்” என்று அவர் கூறினார்.
விழாவில் அனைத்துலக திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழு தலைவர் வி.ஜி.சந்தோசம், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை பொதுச்செயலாளர் முகுந்தன், புதுடெல்லி தமிழ்ச்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆர்.வி.எஸ்.கல்வி குழுமம் கே.வி.குப்புசாமி, சென்னை தமிழ்ச்சங்க ஆலோசனைக்குழு தலைவர் ராமு, பரசுராமன் எம்.பி. ஆகியோருக்கு உலக சாதனையாளர் விருதினை ஆளுநர் வித்யாசாகர்ராவ் வழங்கினார்.
விழாவில் கவர்னரின் மனைவி வினோதா, ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.பாஸ்கரன், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை தமிழ்ச்சங்க செயலாளர் நிதி நன்றி கூறினார்.
