Asianet News TamilAsianet News Tamil
breaking news image

அண்ணாமலைக்கு இந்த உத்தரவுதான் போட்டுள்ளேன்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!

மொத்த தமிழ்நாட்டையும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

I have ordered Annamalai to conquer the whole of Tamil Nadu says pm modi smp
Author
First Published Mar 29, 2024, 7:40 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாடினார். அப்போது தேர்தல் தொடர்பான சில ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

ஒவ்வொரு பூத்தும் முக்கியமானது என்பதை வலியுறுத்தும் வகையில், எனது பூத்; வலிமையான பூத் என்ற தலைப்பில் கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும், தமிழில் தன்னால் பேச முடியவில்லையே என்ற வருத்தம் தனது மனதில் மிக ஆழமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் நிலை  கவலை அளிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, ஊழல் நிலவுவது கவலையாக உள்ளது என்றார். தமிழகத்தை பாஜக புரட்டிப் போடப் போகிறது என்று அனைத்து அரசியல் ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

“தமிழகத்தில் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் ஆட்சி மோசமான நிலையில் உள்ளது. ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது. போதைப்பொருட்கள் நடமாட்டம் இவர்களால் மட்டுமே நடக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தும் சாவடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

“போதைப்பொருள் நம் குழந்தைகளின் வாழ்க்கையையும் நம் குடும்பங்களையும் அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களுக்கான மூல காரணம் தமிழ்நாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம், எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.” என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

நமது எதிர்கால சந்ததியினரை காக்கும் வகையில், தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக பாஜக போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை: விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பாஜக செயல்படுகிறது என்பதை நீங்கள் என்ற பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பாஜகவின் பெண் காரியகர்த்தாக்கள் கடுமையாக உழைத்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும், மொத்த தமிழ்நாட்டையும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையில், பாமக, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios