வாட்ஸ்–ஆப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல என்றும் என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.யும், புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா தனது வழக்கறிஞர் சேதுராமன் மூலம் மதுரை மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “கடந்த 2011–ஆம் ஆண்டு முதல் 2016–ஆம் ஆண்டு வரை மதுரை மேயராக இருந்து மக்கள் பணியாற்றினேன்.

2016–ஆம் ஆண்டு முதல் மதுரை வடக்குத் தொகுதி அதிமுக. சட்டமன்ற உறுப்பினராகவும், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து மக்கள் மத்தியில் நற்பெயரும், நன்மதிப்பும் பெற்றுள்ளேன்.

இந்த நிலையில், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் கடந்த 12–ஆம் தேதி முதல் வாட்ஸ்–ஆப்பில் ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு நபர் நடனமாடுகிறார். அந்த வீடியோவிற்கு கீழ், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நடனமாடும் காட்சி என்று போடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல.

ஆனால், வீடியோவில் நான் நடனம் ஆடுகிறேன் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

வாட்ஸ்-ஆப் மட்டுமின்றி முகநூலிலும் ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் இந்த வீடியோ ஒளிபரப்பட்டு வருகிறது.

என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில், எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து இந்த வீடியோவில் என்னை தொடர்புபடுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.